
விரத நாட்களில் ஒருவேளை உணவைத் தவிர்க்க வேண்டும். ஐம்புலன்களை அடக்கி, மனக்கட்டுப்பாட்டுடன் தீய பழக்கங்களைத் தவிர்த்துத் தங்களுடைய கடமைகளைச் செய்து கொண்டு அன்னையின் திருநாமத்தை நினைவில் எப்பொழுதும் இருத்தி வழிபடுதல் வேண்டும்.
உறங்கும் போதும் செவ்வடையின் மீதே படுத்து உறங்க வேண்டும். விரத காலங்களில் அந்தந்த மாலை எண்ணிக்கைக்கு உரிய சிவப்பு அல்லது மஞ்சள் நிற உடைகளுடனேயே கண்டிப்பாக இருக்க வேண்டும். மிதியடிகள் தவிர்க்கப்பட வேண்டும்.
காலை, மாலை இருவேளையும் நீராடி அன்னையை வழிபடுதல் வேண்டும். காலை தம் வீட்டில் உள்ள அன்னையின் திருவுருவப் படத்தின் முன் அம்மாவின் திருமந்திரப் பாடல்களைப் பாடி வழிபடுதல் அவசியம்.
மாலை வேளைகளில் தவறாமல் மாலை அணிந்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்கோ அல்லது அம்மன் ஆலயத்திற்கோ சென்று கூட்டு வழிபாடு செய்ய வேண்டும்.
அன்னை தன் அருள்வாக்கில் அருளிய வண்ணம், ஐவர் குழுவாகவோ, மூவர் குழுவாகவோ குடும்பங்கள் தமக்குள்ள சேர்ந்து கொண்டு, ஒவ்வொருவர் வீட்டிற்கும், மற்றவர்கள் சென்று அவர்கள் வீட்டிற்கு திருஷ்டி கழித்துவிட்டுக் கூட்டு வழிபாடு செய்துவிட்டு அவர்கள் வீட்டில் அளிக்கும் உணவை உண்ண வேண்டும்.
மேல்மருவத்தூர் புனிதப் பயணம்:
சக்திமாலை அணிந்தவர்கள் மேல்மருவத்தூர் புனிதப் பயணம் துவங்கும் முன் யாரேனும் ஓர் ஏழை வீட்டிற்குச் சென்று செவ்வாடை மீது இருமுடி இறக்கி வைத்து, அவர்களுடன் கூட்டு வழிபாடு நடத்தி தாம் தம்முடைய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி உணவைத் தயாரித்தோ அல்லது கொண்டு சென்றோ அவர்களுக்கு முதலில் உணவு அளித்து விட்டு, பின்னர் அங்குச் சென்ற சக்திகள் உணவருந்த வேண்டும். அந்த ஏழை வீட்டிற்கு முடிந்த அளவு ஆடைதானம் செய்வது சிறப்பு.
பயணம் துவங்குபவர்கள் சற்று தூரம் நடந்து வர வேண்டும். தனி வண்டியில் வருபவர்கள் வண்டியில் அன்னையின் திருவுருவப் படத்தினைப் பொருத்தி மாலையிட்டு, ஆராதனை செய்து வண்டியைச் சுற்றி வந்து, எலுமிச்சம் பழம் பிழிந்து ஊர்தியில் ஏற வேண்டும். முடிந்த வரையில் இரவு நேரங்களில் பயணம் தவிர்க்கப்பட வேண்டும். உந்து வண்டியில் வருபவர்களும், சக்திமாலை செலுத்தியபின் வீட்டிற்கு செல்பவர்களும் 50 கி.மீ. வேகத்திற்கு மிகாமல் பயணம் செய்ய வேண்டும்.
இருமுடிப் பையைத் தோளில் அல்லது தலையில் ஆடைக்கேற்ப எடுத்துச் செல்ல வேண்டும். இயற்கைக் கடன்களைக் கழிக்க வேண்டியிருப்பின் இருமுடியை உடன் வரும் மாலை அணிந்தவர்களிடம் தந்து விட்டுச் செல்ல வேண்டும். தரையில் வைக்கும் போது செவ்வாடை பரப்பி அதன் மேல் இருமுடியை வைக்க வேண்டும்.
இருமுடி செலுத்துதல்:
மேல்மருவத்தூர் சித்தர் பீடதிற்குள் வரிசையாக மந்திரங்களை மனதிற்குள் சொல்லிக்கொண்டு மௌனமாக வர வேண்டும். இருமுடி தொண்டில் இருக்கும் தொண்டர்கள் வழிகாட்டுதல் படி நடந்து கொள்ளவேண்டும். கருவறைக்குச் சென்று தனது மாலையை தானே கழற்றி சுயம்பு அன்னைக்கு அபிடேகம் செய்து, அபிடேகத்திற்கு பின் தானே அணிந்து கொள்ள வேண்டும்.
பிறகு தன்னால் முடிந்த தொண்டினைச் செய்து விட்டு தியானம் செய்து, நீராடி அங்கவலம் வருதல் வேண்டும். உடல் நலிவுற்றவர்கள், கருவுற்றுள்ள பெண்கள், மிகவும் வயதானவர்கள் அங்கவலம் வரத் தேவையில்லை.
சித்தர் பீடத்திலிருந்து கிளம்பும் முன் மாலை அணிந்தவர்களுக்கு, குரு சக்தி எலுமிச்சம் பழம், பூசணிக்காய் கொண்டு திருஷ்டி கழிக்க வேண்டும்.
மாலையைக் கழற்றும் முறை:
சித்தர் பீடத்திலிருந்து வீடு திரும்பும் வரை, சக்திகள் அவரவர்களுக்குரிய மஞ்சள் அல்லது செவ்வடையில் தான் இருக்க வேண்டும். வீடு திரும்பும் போது வேறு எங்கும் செல்லாமல் வீடு திரும்பி அன்னையின் திருவுருவப் படத்தின் மேல் மாலையைக் கழற்றி அணிவித்து விரதத்தினை முடித்துக் கொள்ள வேண்டும்.
சித்தர் பீடத்தில் கொடுக்கப்பட்ட அரிசியுடன் தேவையான அளவு அரிசி கலந்து சர்க்கரை அல்லது வெண் பொங்கல் செய்து தீபாராதனை காண்பித்து, திருஷ்டி கழித்து அனைவரும் உண்ண வேண்டும்.
முக்கிய குறிப்பு:
ஒன்பது முறை சக்தி மாலை அணிந்து இருமுடி அபிடேகம் செய்தி முடித்தவர்கள் பத்தாவது முறை சக்திமாலை அணிவதற்கு முன்பாக, ஒன்பது முறை அணிந்த சக்திமாலையிலிருக்கும் டாலரை தங்கள் வீட்டு முன் வாயிலில் அல்லது பூசையறை வாயிலின் மேல் ஸ்ரீ சக்கரம் தெரியுமாறு பதித்துவிட வேண்டும். ஒன்பது முறை இருமுடி அபிடேகம் முடித்த சக்திமாலை மற்றும் இருமுடிப் பை ஆகியவற்றை ஓடும் நீரில் விட்டுவிட வேண்டும்.
பத்தாவது சக்திமாலை அணிய மஞ்சள் இருமுடிப் பை மற்றும் மாலை, டாலர் புதியதாக வாங்கிக் கொள்ளவேண்டும்.
அவ்வாறே பதிமூன்று முறை மாலை அணிந்து இருமுடி அபிடேகம் செய்து முடித்தவர்கள் 14 வது மாலை போடும் முன் 13 மாலை செலுத்திய ஒருவரின் டாலரை தங்கள் வீட்டு முன் வாயிலில் அல்லது பூசையறை வாயிலின் மேல் டாலரில் உள்ள அம்மன், சுயம்பு வெளியே தெரியுமாறு பதித்துவிட வேண்டும். 13 முறை இருமுடி அபிடேகம் முடித்த சக்திமாலை மற்றும் இருமுடிப் பை ஆகியவற்றை ஓடும் நீரில் விட்டுவிட வேண்டும்.
14 வது சக்திமாலை அணிய மஞ்சள் இருமுடிப் பை மற்றும் மாலை, டாலர் புதியதாக வாங்கிக் கொள்ளவேண்டும்.
“ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா!”
- ஆதிபராசக்தி கல்வி, மருத்துவ, பண்பாட்டு அறநிலை வெளியீடான “சக்தி விரதமும் – சக்தி மாலை அணியும் முறையும்” என்ற நூலிலிருந்து.
இருமுடி ஏந்தும் போது…
இருமுடி செலுத்துவதற்கு முன்பாக ஆலயத்தில் அரைமணி நேரமாவது மனத்தை ஒரு முகப்படுத்தி இருக்க வேண்டும்.அதுவும் முடியவில்லையென்றால் கருவறைக்கு முன் அரை நிமிடமாவது மனத்தை ஒரு முகப்படுத்தினால் கூட, அவர்களுக்கு இருமுடிப் பயனை நான் தருகிறேன்.(1999-ஆம் ஆண்டு கூறியது)
கருத்துகள்